முன்னதாக விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டு வந்தோம். ஆனால் தற்பொழுது உள்ள அவசர காலகட்டத்தில் விறகு அடுப்பில் சமைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு கொடுப்பது என்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இல்லத்தரசிகளின் இத்தகைய சிரமத்தை போக்க கேஸ் சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கேஸ் சிலிண்டரிலிருந்து வெளியாகும் கேஸிலிருந்து நெருப்பை உருவாக்கி அதன் மூலம் சுலபமாக சமையல் செய்ய முடியும்.
இந்நிலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கேஸ் சிலிண்டர்கள் தீந்து விட்டால் அதனை புக் செய்து பெறலாம். இதுபோன்று புக் செய்து பெறப்படும் சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், சிலிண்டரை டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரசீதில் உள்ளதை காட்டிலும் கூடுதலாக எந்தவித தொகையையும் வசூலிக்க கூடாது எனவும், சிலிண்டரை புக் செய்யும் போதே சிலிண்டரின் விலையுடன் டெலிவரிக்கும் சேர்த்து பணத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.