விருதுநகர்: ரேஷன் கார்டு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாக பரவிய தகவல் நேற்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த அவர், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் சில குறைகள் இருக்கிறது.. அதுவிரைவில் சரி செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுபற்றி பார்ப்போம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு உள்ளது. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டிருக்கிறது. அப்படி விடுபட்டவர்களுக்கும் கிடைக்கும் வகையில், வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை மறுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என இன்று (நேற்று) விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்” என்று கூறினார்.
இதனிடையே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். பின்னர், இன்று (நவ.14) திமுக நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டு, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” திராவிட முன்னேற கழகத்தின் குடும்ப விழாவாக இந்த திருமண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. ‘மோடி எங்கள் டாடி’ என்று சொல்லக்கூடியவர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கு அமைச்சர்களாக உட்கார்ந்து இருக்கிறார்கள்.
1967-இல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்பு பெரியார் அறிமுகப்படுத்தியதை சட்ட வழிகளில் கொண்டு வந்தார். அதன் பின்பு தான் சுயமரியாதை திருமணம் வந்தது. இதற்கு காரணம் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் தான். திராவிடர் கழகம் மட்டுமில்லை என்றால், தமிழில் பெயர் வைப்பது இல்லாமல் இருந்திருக்கும். மக்கள் கோவில் கருவறை மற்றும் கோவிலினுள் செல்ல திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம்.
இந்தியாவில் முதன்முறையாக மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்று கொண்டு வந்தவர் கலைஞர். இந்தியாவில் முதல்முறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் தொடங்கி 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல் படுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல மகளிருக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கின்றார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதில் சில குறைபாடுகள் இருக்கிறது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும். தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்று உதயநிதி ஸ்டாலின் இப்போது மட்டுமல்ல.. திருவண்ணாமலையில் பெண்கள் கேள்வி எழுப்பிய போதும் கூறியிருந்தார். தகுதி உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி முதல் அல்லது பொங்கல் முதல் மகளிர் உரிமை தொகையில் இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது எப்படி இருக்கும் என்றால், ஏதாவது சில காரணங்களால் உதவி தொகை கிடைக்காமல் போன ஏழைகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அனேகமாக அரிசி அட்டைதாரர்கள் பலருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இது நடைமுறைக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.