சென்னை, ஜூலை 26: மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்ட உத்தரவு:
மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. இதற்காக சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உரிய பரிந்துரைகளை, தமிழக அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அளித்திருந்தார்.
அதில், அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அலுவலகங்களில் ‘ஏ முதல் டி’ வரையிலான தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களைக் கணக்கில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பணியிடங்களில் 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தப் பணியிடங்களை கண்டறிய வேண்டும் எனவும், அந்த இடங்களில் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்தி அனைத்துப் பணியிடங்களையும் ஓராண்டுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் கடிதத்தில் கோரியிருந்தார்.
மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரின் பரிந்துரைகளை தமிழக அரசு ஆய்வு செய்தது. காலியாக உள்ள பணியிடங்களை தெரிவு செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்தி பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப அனைத்து அரசுத் துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகளும் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வழி செய்ய வேண்டும். இதற்காக அந்தந்த துறைகளின் விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் ஒருமுறை தளர்வுகளை வழங்கிட வேண்டும்.
சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்துதல் தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து, பணிகளின் காலாண்டு கால முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் இரா.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஒரே நாளில் மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை..! இன்னைக்கு ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா?
- பின்னடைவு காலிப் பணியிடங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு! தமிழக அரசின் புதிய உத்தரவு!
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies [current_date format=d/m/Y]
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India