BREAKING || மகளிர் உரிமைத் தொகை… யாருக்கெல்லாம் ரூ. 1000… இப்படிதான் தேர்வு செய்யப்படும்
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்” ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் “மகளிர் உரிமை தொகை – சிறப்பு முகாம்” ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
களிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்த ஒன்று. இதை எப்போது செயல்படுத்தப் போகிறார்கள் என்று 2021 மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. திமுக ஆட்சி ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் கேள்விக்கான பதில் கிடைத்தது.
அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது சர்ப்ரைஸ் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பிறகு 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இடம்பெற்றது. அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
தகுதி வாய்ந்த மகளிர் யார்?
சுமார் ஒரு கோடி மகளிர் இதன் பலனை அனுபவிப்பர் எனக் கூறப்பட்டது. அதேசமயம் தகுதி வாய்ந்த மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. தகுதி வாய்ந்த மகளிர் யார்? அந்த தகுதியை எப்படி நிர்ணயம் செய்யப் போகிறார்கள்? போன்றவை பெரும் விவாதமாக வெடித்தது. இதற்கிடையில் மகளிர் உரிமைத் தொகை எப்படி விநியோகம் செய்வர்? என்ற கேள்வி எழுந்தது.
நியாய விலைக் கடைகள் மூலம் ஏற்பாடு
நியாய விலைக் கடைகளில் பயனாளர்களின் கைகளில் நேரடியாக வழங்கப்படுமா? இல்லை கூட்டுறவு வங்கிகள் மூலம் மைக்ரோ ஏடிஎம் கார்டுகள் வாயிலாக அளிக்கப்படுமா? வங்கிகளில் நேரடியாக வரவு வைக்கப்படுமா? இதுதொடர்பாக நிதித்துறை, வருவாய்த்துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, சிறப்பு செயலாக்கத் திட்டத்துறை ஆகியவற்றுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
வழிகாட்டு நெறிமுறைகள்
நேற்றைய தினம் (ஜூன் 26) தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த மாதத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தகுதி வாய்ந்த மகளிர் என்ற அடிப்படையில் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
வங்கிகள் மூலம் நடவடிக்கை
இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், வருமான வரி செலுத்தாதவர்கள் என்ற கண்டிஷன் முக்கியமாக இடம்பெறும் என்கின்றனர். இதுதவிர சொந்த நிலம் இருக்கிறதா? என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுமாம். 1,000 ரூபாய் எப்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது எனக் கேட்கையில், வங்கிகள் மூலம் வழங்கப்படவே அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். இந்த தகவல் வைரலாகி வருவதை கவனித்த பொதுமக்கள் வங்கி கணக்கு தொடங்கவும், ஏடிஎம் சரியான முறையில் செயல்பாட்டில் வைக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.