பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பம்
சென்னை ஐஐடி தகவல்
சென்னை, ஆக. 3: சென்னை ஐஐடி-இல் இணையவழியில் வழங்கப்படும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கவும், உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ‘பி.எஸ்.- எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான பாடத் திட்டம் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களைப் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தப் படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பாடங்கள் முழுவதும் இணையவழியிலேயே பயிற்றுவிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/es என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் ஆட்டோ மோட்டிவ், செமி கண்டக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மேலும், பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்கள் நன்றாக பயில ஏதுவான வழிகாட்டுதல்கள், குறிப்புகள் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.