விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறுவார்கள். இத்தகைய விவசாயத்தை காக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம்(PM கிசான் திட்டம்) ஆகும்.
PM கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணை வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் தொகையை வைத்து விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான விவசாய பொருட்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் விளைவாசியானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பி எம் கிசான் திட்டத்தின் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் PM கிசான் தொகையை 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.