தமிழகத்தில் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற ஜூன் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரைப்படி படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். இந்தபோட்டியில் முதல் பரிசு ரூ. 10000, இரண்டாவது பரிசு ரூ.7000, மூன்றாவது பரிசு ரூ. 5000 காசோலையாக வழங்கப்படும். இந்த போட்டியானது வருகிற ஜூன் 30 ஆம் தேதி எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.