தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை முக்கியமாக 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கனமழை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 10நாளாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக கரூரில் 38 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையை பொருத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பொழியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, இன்றும் நாளையும் வடக்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது