தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன்பாடு என்ன? காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன? இந்தக் காப்பீடு தொடர்பான இது போன்ற கேள்விகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பராமரிப்பில் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது. தமிழகத்தில் 99.8 சதவிதம் பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது.
இளம்பிள்ளை வாதம், தொழுநோய் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது என்று தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், பலரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய திட்டமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இத்திட்டத்திற்கு 2022-23ம் ஆண்டிற்கு ரூ. 1, 547 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.
கிடைக்கும் சிகிச்சைகள்
பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
குறிப்பாக, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதய, நரம்பு, சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைகளுக்கு உதவி பெறலாம்.
அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சிகிச்சைகள் பெறலாம். (சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் விவரமாக உள்ளது)
சிகிச்சை பெற தகுதி
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து 22 இலக்க எண் கொடுப்பார்கள். காப்பீட்டு அட்டை வருவதற்கு முன்னதாக, மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 22 இலக்க எண்ணைக் கொண்டு, சிகிச்சை பெறலாம். குடும்ப தலைவர் காப்பீட்டு அடை பெற்றால், அவருடைய சட்டப்பூர்வமான மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர்கள் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். ஆனால், அவர்கள் பெயர்கள், குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
புலம் பெயர் தொழிலாளர்கள், இலங்கைத் தமிழர்கள்
மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து 6 மாதங்களுக்கு மேல் தமிழ்நாட்டில் தங்கி இருப்பவர்களும் பயன்பெறலாம். அதற்கு தமிழ்நாடு தொழில் துறையின் சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களும் பயன்பெறலாம். அவர்கள் முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்றை, இணைத்து, வருமான சான்று இல்லாமலேயே சேரலாம்.
உதவி மற்றும் தொடர்புக்கு
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை https://www.cmchistn.com/features_ta.php என்கிற இணைய தளத்தில் அறியலாம். இதில், ஆதார் எண் இணைப்பு, விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, காப்பீட்டு அட்டை செயல்பாட்டு நிலை, சிகிச்சை பெறும் நோய்களின் விபரம் உள்ளிட்டவற்றையும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும், மருத்துவ காப்பீட்டு அட்டை பெறவில்லை என்றாலும் சிகிச்சை மற்றும் சேர்க்கை தாமதப்படுத்தப்படுவதில்லை. குடும்ப அட்டை விபரங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்குள், காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து, 22 இலக்க எண்ணைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் முன் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். வீடு தேடி மருத்துவ பரிசோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
மிகத் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவமனை திட்டமும் உள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம். இத்திட்டத்தில் ரூ. 14 ஆயிரம் பணமாகவும் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் இரண்டும் வழங்கப்படுகின்றன.
அரசு மருத்த்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 15 விதமான பொருட்கள் கொண்ட பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் 10 – 19 வயதுடைய வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
விபத்தில் சிக்கியோருக்கு உதவினால் விருது
இன்னுயிர் காப்போம் என்ற உயிர் காக்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சையுடன் 5 அம்ச திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,150 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 33,247 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மொத்தம் ரூ. 29.56 கோடி செலவில் முழு வீச்சில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 33 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்குபவர்களை ‘கோல்டன் அவர்ஸ்’ என்று அழைக்கக் கூடிய குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பவர்களுக்கு நற்கருணை விருதுடன் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.