இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஈடாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துதான் வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடையே அதிகரித்த காரணத்தால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அதிக அளவு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காததால் இதை நிலத்தில் போடும்பொழுது அந்த இடத்தில் மழை நீர் கூட உள்ளே நுழைய முடியாமல் போய்விடுகிறது.

இந்நிலையில், இந்த பூமியை நமக்கு மட்டும் என்று நினைக்காமல், அடுத்த தலைமுறைக்கும் வாழும் தகுதி உடையதாக விட்டுச்செல்ல வேண்டும். இருக்கும் வளங்களை எல்லாம் நாமே எடுத்துக்கொண்டு குப்பை தொட்டி போன இந்த பூமியை விட்டுச் சென்றால் அடுத்த தலைமுறை பிளாஸ்டிக் குப்பைகளோடு தான் வாழ வேண்டிய சூழல் இருக்கும். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.