“புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை” – பேரவையில் உதயநிதி தகவல்

 

 

சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என வினவினார்.

தொடர்ந்து, கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா என கேட்டார்.கேள்விகளுக்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை 5.27 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 76 சதவீதம் அதாவது 4 லட்சத்து 897 மகளிர் மாதம் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை பெறுகின்றனர். வேடசந்தூர் 62 ஆயிரம் மகளிர், உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதல் கட்டமாக ஏற்கப்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டு செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதல் முறை விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி 1 கோடியே 14 லட்சத்து 65,525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் எவரும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு நாங்கள் ஆய்வுக்கு செல்லும்போது, உரிமைத்தொகை வேண்டி மகளிர் விண்ணப்பம் அளிக்கின்றனர். அதுபற்றி, விவரங்களை சேகரித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வரின் அறிவுரைகளை பெற்று இதுவரை பயன்பெறாத மகளிருக்கு திட்டத்தின் பயன் கிடைப்பதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *