தமிழகத்தில் முன்னதாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், நாடு முழுவதும் கடந்த சில வருடங்களாகவே மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்றால் நீட் என்ற நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வு எழுதி அதில் தோல்வியுறும் மாணவர்களில் பலரும் தற்கொலை போன்ற தவறான முடிவைத் தேடி செல்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் நீட் தேர்வை இரண்டு முறை எழுதியும் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்கம் தாங்காமல் இவரின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நீட் தேர்வானது மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் தடையாக உள்ளது மட்டுமல்லாமல் பல மாணவர்களின் உயிரையும் பழிவாங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வை சட்ட ரீதியாக நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூடிய விரைவில் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.