இந்தியாவில் முதல்முறையாக, பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை காணொலி வடிவில் வழங்கும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியின் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பயன்பெற இருக்கின்றனர். 1 முதல் 12 வகுப்புகளுக்குமான பாடங்களை 27 ஆயிரம் கருப்பொருட்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்கள் இதில் அடங்கியுள்ளன.
நாட்டிலேயே முதன்முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி உள்ள செயலியாகவும் பள்ளிக் கல்வித்துறை இதனை முன்னிலைப்படுத்துகிறது. இந்த மணற்கேணி செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள், அதிலுள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் சுமார் 25 லட்சம் மாணவ மாணவியர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணற்கேணி செயலியின் வெளியீட்டு விழா தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று(ஜூலை 25) மாலை நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறைச் செயல்பாடுகளில் பகுதியளவு பயன்பாட்டில் இருக்கும் இந்த செயலியின் அதிகாரபூர்வ அறிமுகம் இன்று நடைபெறுகிறது..
TNSED Manarkeni App Download – Click here