தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தொடக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வந்தது. அதன்பிறகு சில நாட்கள் மழை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்பொழுது உள்ள வானிலை நிலவரப்படி இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்றும் நாகை, காரைக்கால், கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், . வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால் இன்று தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.