கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள். இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் பட்ஜெட் கூட்டுத்தொடரில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை, நிதித்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குபின், இதுதொடர்பான முறையான அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.