தமிழகத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட உள்ள ஒரு திட்டம் தான் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டமாகும். இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை தமிழக முதல்வர் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த இரண்டு கட்ட முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 65 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தற்பொழுது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தகுதியான பெண்கள் யார் அவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில், தேர்வு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகளின் பட்டியலை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.