இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையானது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்க கட்டங்களை வசூலித்து வருகின்றனர். இந்த கட்டணங்கள் சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மொத்தமாக 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 600 சுங்கச்சாவடிகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே இந்த சுங்கச்சாவடிகளின் கட்டணமானது ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தால் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, தற்போது 28 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையானது இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, கார்களுக்கான கட்டணம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு 78 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு 165 ரூபாயிலிருந்து 175 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அதிக சக்கரங்களை கொண்ட லாரிகளுக்கான கட்டணம், சக்கரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.