தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்தான் “காலை சிற்றுண்டி” திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு தொடக்க பள்ளியில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், காலை உணவு திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பள்ளிக்கு வரும் குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் இருப்பது தவிர்க்கப்படும் என்பதாகும். இந்த திட்டமானது தற்பொழுது வரை ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 31008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்களுக்கு இந்த திட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.