தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி!
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் மூலமாக பேருந்தில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்ற நிலையில் போக்குவரத்துக்கழகத்தின் இணையதள பக்கம் முடங்கியது.
அரசு போக்குவரத்துக்கழகம்:
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாதம் முடிவடைந்து வளர்பிறை முகூர்த்த நாள் துவங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1250 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் செயல்பட இருக்கிறது. இந்நிலையில், வார இறுதி நாட்கள் என்பதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசின் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக முன்கூட்டியே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையபக்கத்தில் பதிவு செய்ய காத்திருந்தனர்.
ஆனால், ஆன்லைன் பதிவு தொடங்கியவுடன் ஒரே நேரத்தில் 60,000 க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்த காரணத்தினால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதள பக்கம் முடங்கியது. இந்நிலையில், மீண்டும் இணைய பக்கம் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் ஆன்லைன் மூலமாக புக் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.