தமிழகத்தில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இதோ!!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியாவது வழக்கம். அதன்படி 2024 மற்றும் 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (அக்டோபர் 14) பொது தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
அதன் படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 9ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவும், மே 19ம் தேதி 11ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளன. பன்னிரண்டாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.