சட்டசபையில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசுகையில், சோழவரம் ஊராட்சியிலுள்ள மாதவரம் பஞ்சாயத்தில் முஸ்லிம் நகர் முதல் மாதவரம் காலனி இடையே மின்சார பற்றாக்குறை இருக்கிறது. அங்கே ஒரு 100 கிலோவாட் மின்மாற்றி ஏற்படுத்தினால், சோழவரம் முழுமைக்கும் மின்சார சப்ளை என்பது மிகச் சிறப்பாக இருக்கும்.
அமைச்சர் செந்தில்பாலாஜி: பொன்னேரி தொகுதியில் மட்டும், புதியதாக 5 மின்மாற்றிகள் அதிக மின் பளுவை குறைப்பதற்கும், 6 புதிய மின்மாற்றிகள் குறைந்த மின்அழுத்தத்தை சீர்செய்வதற்கும் என மொத்தம் 11 புதிய மின்மாற்றிகள் நிறுவ திட்டமிடப்பட்டு, இதுவரை 3 மின்மாற்றிகள் இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முஸ்லிம் நகர் பகுதியில் ஏற்கனவே 100 கிலோவாட் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேவையேற்படின் அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்து இந்த ஆண்டில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
துரை.சந்திரசேகர்: மீஞ்சூர் பேரூராட்சியில் சுமார் 18,000 மின் இணைப்புகள் இருக்கின்றன. ஆனால், மீஞ்சூர் பகுதியில் மின் பற்றாக்குறை என்பதும், அறிவிக்கப்படாத மின் தடை என்பதும் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்று ஆய்வு செய்தபோது, போதிய மின் ஊழியர்கள் அங்கு இல்லையென்று சொல்கிறார்கள். அதைவிட முக்கியமாக அங்கே நீண்ட நாட்களாக மக்களுடைய கோரிக்கை துணை மின் நிலையம்.
வளர்ந்து வருகின்ற நகரம், துணைமின் நிலையம் அமைக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த கோப்பு வருவாய்த் துறையிலே இருக்கிறது. அதேபோல தற்போது இருக்கின்ற அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதுவும் பழுதடைந்து, இடிந்து விழக்கூடிய நிலையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், உதவி செயற்பொறியாளர் பணியிடம் கூட அங்கு காலியாக இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மின் பற்றாக்குறையும், மின் தடையும் ஏற்படுகிறது.
அதை மிக விரைந்து செயல்படுத்தி தர வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி: மின் வாரியத்திலுள்ள குறிப்பிட்ட சில காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நிதித் துறையினுடைய அனுமதி கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு நிதித் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, தேவை ஏற்படக்கூடிய பணியிடங்களை நிரப்புவற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.