தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 31 2024 ம் தேதியில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 59,864 காலியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மொத்தமுள்ள 1,42,208 பணியிடங்களில் பாதிக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்ப படாமல் இருப்பதை அறிய முடிகிறது. இதற்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்கள் தேர்வு எப்போது நடந்தது என்றால், கடந்த 2021ல் 9613 கேங் மேன்கள் தேர்வு நடைபெற்றது. அதற்கு முன்பு ஆட்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு TNEB தரப்பில் வெளியிடப்பட்ட போது, அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அனைத்து அரசுத்துறை பணியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி யின் கீழ் நிரப்பப்படும் என அறிவித்தார்.
இதன்பின்னர் TNEB பணியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இருந்து இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இது பற்றி கேட்ட போது TNEB தரப்பில் இருந்து காலிப்பணியிடம் குறித்த தகவல்கள் வரவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2023-ம் ஆண்டு வாரிய கூட்டத்தில் வெளியிடப்பட்ட அரசாணை மூலம் A.E , field assistant போன்ற 10,260 பணியிடங்களை மட்டும் நிரப்ப முடிவு செய்து, இது தொடர்பான ஒப்புதல் பெற நிதித்துறை உட்பட அரசு துறைகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒப்புதல் இதுவரை கிடைக்காத நிலையில் அந்த பணியிடங்களும் நிரப்ப படாமல் உள்ளது.
ஒருபுறம் TNEB பணிகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இருக்க, மறுபுறம் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பணியில் இருப்போருக்கும் இது பணிச்சுமையை அதிகரித்து உள்ளது. மேலும் வரும் காலங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 60000க்கும் அதிகமாக மாற வாய்ப்புள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது அரசு அதிகாரிகள், வேலை தேடும் இளைஞர்கள், பொதுமக்கள் மூவரையும் பாதிக்கும் வகையில் இருப்பதால் இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.