TNPSC Group 4 Education Qualification Change 2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது.
TNPSC குரூப் 4 தேர்வு:
இந்த குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் அதிகபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை. அதாவது 10 வகுப்பு தேர்ச்சி முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குரூப் 4 தேர்வை எழுதலாம்.
TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தோல்வி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அதிக கல்வித்தகுதி இருப்பதாக கூறி, பணியில் இருந்து சதீஷ்குமார் நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதை அதிக கல்வித் தகுதியாக கருத முடியாது. அதனால், அதிக கல்வித்தகுதியுடன் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கான சிறப்பு விதிகளின்படி, அதிக வயதுடையவர்களை பணியில் நியமிக்கலாம் என்ற உத்தரவு சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு பணியில் நியமிக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும். தொடர்ந்து பணியில் நீட்டிக்கவும் உரிமை இல்லை.
குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாகப் புறக்கணிப்பு மற்றும் சமவாய்ப்புகள் மறுக்கப்படுவது தடுக்கப்படும் என நம்புகிறேன், என தனது தீர்ப்பில் கூறினார்.