டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024: தேர்வர்களுக்கான முக்கிய தகவல்! தவறாமல் படிங்க – TNPSC Group 4 Exam 2024 Update
TNPSC Group 4 Exam 2024 Update
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது.
டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 15,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை இன்னும் சில தினங்களில் வெளியிட உள்ளது. அந்த தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம்.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 1, பொறியியல் பணிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிப்பணியிட விவரங்கள் பெறப்படும், அதற்கேற்றபடி வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
காலிப்பணியிடங்களின் விவரங்கள்:
அந்தவகையில் 2023-24 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத்துறை சார்பாக முன்வைக்கப்பட்டது.
அதன் பின்னர், மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் விவரங்கள் அனுப்பப்பட வேண்டும்.
மேலும் 2023-24 ஆம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வு 15000 பணியிடங்கள் வெளியாக வாய்ப்பு:
லட்சக்கணக்கானோர் எழுதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 15125 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம். இது, தேர்வர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். கடந்த முறை 7 ஆயிரம் பணியிடங்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு 10 ஆயிரத்து 205 ஆக அதிகரிக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு:
அரசுப் பணி என்பதால், குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது நடைபெறும்? காலிப் பணியிடங்கள் எவ்வளவு? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது என ஆண்டு அட்டவணையில் அறிவித்துள்ளது.
கட்ஆப் மதிப்பெண்:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ‘கட்ஆப்’ மதிப்பெண் அதிகமாக இருக்கும் அதேநேரம், சொன்னபடி நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குரூப் – 4 தேர்வுமுறை:
டிஎன்பிஎஸ்.சி குரூப் 4 தேர்வு ஒரே கட்ட எழுத்து தேர்வு முறை ஆகும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இது, பொது அறிவு (திறனறிவு), பொது தமிழ், திறனறிவு என 3 பிரிவுகளை கொண்டுள்ளது. ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
அனைத்து வினாக்களும் Objective Type-யில் கேட்கப்படும். குரூப் – 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும்.
அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
குரூப் 4-க்கான பாடத்திட்டம்:
TNPSC குரூப் 4 தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது. அதாவது, பொது ஆய்வுகள் – திறன் மற்றும் மனத்திறன் – தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு ஆகிய பிரிவுகளை கொண்டது. அவற்றில் 100 வினாக்கள் தமிழ் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும்.
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி:
TNPSC தேர்வுக்கு வீட்டிலேயே தயாராகும் தேர்வர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. ஏனென்றால், வீட்டில் இருந்தபடியே TNPSC தேர்வுக்கு எவ்வாறு தயாராகலாம் என்பதற்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்க போகிறோம்.
நீங்கள் வீட்டில் இருந்தபடி தேர்வுக்கு தயாராகும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை பற்றி கூறுகிறோம். இது உங்களுக்கு உதவியாக இருப்பதுடன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.
உங்களின் சரியான திட்டமிடல் உங்களை முன்னோக்கி கூட்டிச்செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு முன், தேர்வில் வெற்றிபெற தேவையான முக்கிய காரணிகளைப் பற்றி பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தயாராகும் போது செய்ய வேண்டும் சில முக்கிய குறிப்புகள் இங்கே.
- TNPSC தேர்வுக்கான பாடத்திட்டத்தை புரிந்து கொள்ளுதல்.
- முக்கியமான தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கவும்.
- முழுமையான அர்ப்பணிப்புடன் உங்களை தயார்ப்படுத்துங்கள்.
- படிக்கக்கூடிய திருத்தக் குறிப்புகளை உருவாக்கவும்.
- மாதிரி தேர்வு மற்றும் வினாடி வினாக்களை பயிற்சி செய்யுங்கள்
- முந்தைய ஆண்டு தேர்வு கேள்விகளை தீர்க்க முயலவும்.
- உயர்தர மற்றும் தரமான புத்தகங்களை ஆய்வு செய்யவும்.
“பயிற்சி ஒரு மனிதனை முழுமையாக்குகிறது”. TNPSC தேர்வுக்கு வீட்டிலேயே எப்படித் தயாராவது என்பது பற்றி நாம் கீழே பார்க்கலாம்.
தெளிவான திட்டமிடல்:
TNPSC தேர்வுக்கு குறுகிய நாட்களே உள்ளதால், நாம் தேர்வுக்கு தயாராவதற்கு தெளிவாக திட்டமிட வேண்டும். தேர்வுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே நாம் படிக்க தொடங்க வேண்டும்.
TNPSC தேர்வில் ஒவ்வொரு தாளும் பத்துக்கும் மேற்பட்ட பாடங்களை உள்ளடக்கியிருப்பதால், ஓரிரு மாதங்கள் போதுமானதாக இருக்காது. அப்படி ஓரிரு மாதங்களில் நீங்கள் படிக்க ஆரம்பித்தால், நாமப்பாடம் செய்ய முடியுமே தவிர, எதையும் ஆராய்ச்சி செய்து படிக்க முடியாது.
முந்தைய தேர்வுத் தாள் பயிற்சி:
நாம் எவ்வளவுதான் தேர்வுக்கு தயாரானாலும் தேர்வு அறைக்குள் நுழைந்ததும் நமக்குள் இருக்கும் பதட்டம் நம்மை தோற்கடித்துவிடும். எனவே, உங்களை வெற்றிபெறச் செய்ய நீங்கள் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்ய வேண்டும்.
அது தவிர, நண்பர்களிடமிருந்து குறிப்புகளை கடன் வாங்குவதை விட, புத்தகங்களிலிருந்து நீங்கள் அதிகம் படிக்க வேண்டும். நீங்கள் எழுத இருக்கும் TNPSC தேர்வுத் தாள்களின் பேட்டர்ன் பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஒரே படிப்பு முறை:
ஒரு நடைமுறை கால அட்டவணையை TNPSC தேர்வுக்கு தயாராவதற்காகவே நீங்கள் முதலில் உருவாக்க வேண்டும். அதை உங்கள் அறையில், உங்கள் கண்ணில் படும்படி ஒட்டுவைக்கவும். அதில், காலை எழுவதில் இருந்து இரவு உறங்க செல்லும் வரை அனைத்து செயல்களையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக, ஒரு பாடத்திற்கு எவ்வளவு நேரம் எடுக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த பாடத்தை படிக்க வேண்டும். தினசரி தேர்வுக்கான நேரம் என அனைத்தையும் புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும். ஒரு நல்ல தொடக்கம் இறுதியில் வெற்றிகரமான சாதனையாக மாறும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த திட்டத்தை தினமும் பின்பற்றுங்கள்.
சிறப்பு கவனம் :
நீங்கள் TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தபடி தயாராகும் போது, உங்களுக்கு எப்போதும் அதிக நேரம் கிடைக்கும். எனவே, நீங்கள் கடினமாக நினைக்கும் பாட தலைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். எளிமையான தலைப்புகளை படிப்பதற்கு குறைந்த நேரத்தை திட்டமிடுங்கள்.
எடுத்த உடனே மிகவும் கடினமான தலைப்புடன் தயாரிப்பைத் தொடங்க வேண்டாம். ஏனென்றால், நாம் புதிய விஷயங்களை படிக்கையில் அதிக நேரம் தேவைப்படும். அத்துடன், அது உங்களை எளிதில் குழப்பிவும் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.