மதுரை: தமிழகத்தில் தட்டச்சு இளநிலை, முதுநிலை தேர்வுகளை புதிய முறைப்படி நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் -1, தாள்-2 என இரு நிலைகளில் நடைபெறுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள்-2 ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தாள்-1 ஸ்டேட்மென்ட், லெட்டர் தேர்வாகவும், தாள்- 2 ஸ்பீடு தேர்வாகவும் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த புதிய தேர்வு நடைமுறையை ரத்து செய்து, 75 ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வரும் பழைய தேர்வு நடைமுறை அடிப்படையில் தட்டச்சு தேர்வுகளை நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தனி நீதிபதி விசாரித்து, புதிய தேர்வு முறைக்கு தடை விதித்து, பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக திருச்சி தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ”தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி (தாள் 1- ஸ்டேட்மென்ட், லெட்டர், தாள் 2- ஸ்பீடு) நவ.13-க்குள் நடத்தி முடிக்க வேண்டும். தட்டச்சு பயிற்சி நிலையங்களின் கூட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்துவதா? இல்லை புதிய முறைப்படி நடத்துவதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Source : www.hindutamil.in