பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள்
தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதி பட்டியலுக்குள் வரும் பெண்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். திட்டம் தொடங்கும் போது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதி மாதம் 15ஆம் தேதி!
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாதம் 1000 ரூபாய் வரவு வைக்கும் தேதியும் முக்கியமானதாக உள்ளது. மாதத்தின் நடுவே 15ஆம் தேதி வரவு வைக்கப்படுவதால் பெண்களுக்கு பணத் தேவை எழும் சமயத்தில் சரியாக 1000 ரூபாய் சென்று சேர்கிறது. 15ஆம் தேதி ஞாயிற்று கிழமையாகவோ, வேறு காரணங்களுக்காக வங்கி விடுமுறையாக இருந்தாலோ அதற்கு முன்பாகவே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 10ஆம் தேதி
அதே சமயம் பண்டிகை காலங்களில் மக்களின் தேவை அறிந்து முன்கூட்டியே வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதிக்கு பதிலாக 10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டும் மகளிர் உரிமைத் தொகை 10ஆம் தேதி வரவு வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் முடிவு என்ன?
பொங்கல் பண்டிகைக்கு கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதை சரி செயவதற்காகாவும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வரவு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை.