இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த சந்திராயன் 3 விண்கலம் மெல்ல மெல்ல பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை கடந்த நிலவை சென்றடைந்து தற்பொழுது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னர் நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை தயார் செய்தது இஸ்ரோ. இந்த ஆதித்யா எல் 1 விண்கலமானது செப்டம்பர் 2(நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்படும் முதல் விண்கலமாக ஆதித்யா எல் 1 உள்ளது. இது சூரியனின் பல அடுக்குகள் மற்றும் காந்த புயல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பட உள்ளது.
மேலும், இந்த ஆதித்யா எல் 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி 57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம், 24 மணி நேர கவுன்ட்டவுன், இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.