தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கான பணிகளை தமிழக அரசு தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக விண்ணபங்கள் மற்றும் பதிவேற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணபிக்க தவறியவர்களுக்கு மூன்றாம் கட்ட முகாமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் 13 வகையான கேள்விகள் கேட்கப்படும் அதன்பிறகு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் கேட்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, முதியோர் உதவித்தொகை பெறுவோரும் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய தளர்வுகளால் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் செலவினம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட் செலவினமானது 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.