நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்ப்டடுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு அல்லது 11 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1.4 லட்சமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இதில் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.