the-myths-and-facts-surrounding-the-famous-tirupattur-pappathi-amman-temple

பாப்பாத்தி அம்மன் கோயில்: மரமே கோயிலாக விரிந்திருக்கும் மர்மம்; காரிய சித்தி கண்டறிய அதிசயச் சுனை!

பாப்பாத்தி அம்மன்

the-myths-and-facts-surrounding-the-famous-tirupattur-pappathi-amman-temple

அந்த பெண் குழந்தைதான் இந்த பாப்பாத்தி அம்மன் எனவும், பனிக்குடம் உடைந்து சென்ற நீர்தான் இங்குத் தீர்த்தக் குளமாக மாறியது என்றும், அறுத்தெறிந்த தொப்புள் கொடி பல கிளைகளாக மாறி இந்த அம்மனுக்கு நிழல் தரும் கோயிலாகவும் மாறியதாகக் கூறுகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாப்பாத்தி அம்மன் திருக்கோயில். கோயில் என்றால் இங்கு அழகிய கட்டுமானம், கோபுரம் என்று எதுவும் கிடையாது. ஒரு மரமே விரிந்து பரந்து கோயிலாக மாறி இருக்கிறது. இங்குக் கோயிலைக் கட்ட முயன்றாலும் அது முடிவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோயில், மண்டபம், கோபுரங்கள் ஆகியன எழுப்ப அந்த அம்மன் விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர்.

பாப்பாத்தி அம்மன் கோயில்

பாப்பாத்தி அம்மன் கோயில்

வற்றாத குளம்… அறியமுடியாத ஊற்று! the-myths-and-facts-surrounding-the-famous-tirupattur-pappathi-amman-temple

இந்த சக்தி நிறைந்த பாப்பாத்தி அம்மன் கோயிலில்தான் ஒரு அதிசய தீர்த்தக் குளம் இருக்கிறது. இது மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படாத மர்மமாக உள்ளது. இக்குளம் வெறும் ஐந்து அடி ஆழம்தான், ஆனால் இக்குளத்தில் தண்ணீர் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது என்று இன்றளவும் யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. இதை ஆராய வந்தவர்களுக்குத் தீங்கு நேர்ந்ததாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் இக்குளத்தில் எக்காலத்திலும் தண்ணீர் வற்றவே வற்றாதாம். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் வந்தாலும் இக்குளத்தில் மட்டும் எப்போதும் தண்ணீர் வற்றுவதே இல்லையாம். அப்படித் தண்ணீர் வற்றினால் இக்கிராமத்திற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது.

அதிசய தீர்த்த குளம்

அதிசய தீர்த்த குளம்

நினைத்தது நிறைவேறுமா? சுனை காட்டும் அறிகுறி!

இந்த தீர்த்தக் குளத்தின் சிறப்பு என்னவென்றால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனிடம் வேண்டியதை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு வாழைப்பழத்தை மூன்றாகப் பிரித்து அந்தத் தீர்த்த குளத்தில் விடுகின்றனர். அந்த வாழைப்பழத் துண்டுகள் உடனடியாக மேலே வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறுமாம். மாறாகத் தாமதமாக மேலே வந்தால் தாங்கள் நினைத்ததும் தாமதமாகத்தான் நிறைவேறுமாம். ஒருவேளை வாழைப்பழத் துண்டுகள் மேலே வராமல் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

நேர்த்திக் கடன்

நேர்த்திக் கடன்

வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!

அதுமட்டுமல்லாமல் இக்குளத்தில், சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகள் கன்று ஈன்றவுடன் முதலில் கறந்த பாலை இக்குளத்தில் ஊற்றுகின்றனர். அப்படி ஊற்றினால் மடியில் பால் அதிகமாகச் சுரக்கும் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பக்தர்களுக்கு ஏதேனும் உடலில் கட்டி இருந்தால் இக்குளத்தில் முழு வெல்லத்தை விடுகின்றனர். அந்த வெல்லம் எப்படி மெல்ல மெல்ல குளத்தில் கரைகிறதோ அவ்வாறே அக்கட்டியும் கரையும் என்பது ஐதிகம். வெல்லம் கரைத்துவிடுவதன் வழியே பல நோய்கள் தீர்ந்து விடுவதாகவும் சொல்கிறார்கள்.

திருமண வரம், குழந்தை வரம், உடல் நலக்குறைவு, கால்நடைகளுக்குப் பிரச்னை போன்ற பல வேண்டுதல்களுக்காக இக்கோயிலுக்குப் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் முன்வைத்த வேண்டுதல்கள் நிறைவேறினால் பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செலுத்த பக்தர்கள் வருகின்றனர். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடந்தால் கோயிலாக இருக்கும் மரக் கிளைகளில் தாலியைக் கட்டுகின்றனர். குழந்தை வரம் கேட்டு நிறைவேறியவர்கள் ஆண் குழந்தை பிறந்தால் மணியையும், பெண் குழந்தையாக பிறந்தால் தொட்டிலையும் கட்டுகின்றனர். மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் நொடி தீர்ந்தால் மண்ணால் செய்யப்பட்ட மனிதச் சிலையையும், மாட்டின் சிலையையும் கோயிலுக்கு நேர்த்திக் கடன்களாகச் செலுத்துகின்றனர். இக்கோயிலில் குடியிருக்கும் பாப்பாத்தி அம்மன், சைவம் என்பதால் ஆடு, கோழி என்று எதுவும் பலியிடுவதில்லை. பொரியும், வேர்க்கடலையும்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பாப்பாத்தி அம்மன் கோயில்

பாப்பாத்தி அம்மன் கோயில்

தொப்புள்கொடி மரமானது… பனிக்குட நீர் குளமானது!

இங்கு இந்தக் கோயில் உருவாக ஒரு வரலாற்றைக் கூறுகின்றனர் இக்கிராம மக்கள். ஒரு பிராமண பெண் பழங்குடியின இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதால் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை விட்டுத் துரத்துகின்றனர். இதனால் அவர்கள் கணவன் மனைவியாக தனித்து வசித்து வந்திருக்கின்றனர். பின்பு அப்பெண் கர்ப்பம் ஆகிறாள். ஒரு தாயாக மாறியவுடன் தன் பிறந்த வீட்டின் ஞாபகம் வருகிறது. ஆனால் கணவர் அங்கு அழைத்துச் செல்ல மறுக்கிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண் ஒருநாள் இரவோடு இரவாக வீட்டை விட்டுத் தனியாகப் பிறந்த வீட்டை நோக்கிச் செல்கிறாள். மலையின் அடிவாரத்தில் செல்லும் பொழுது திடீரென பிரசவ வலி ஏற்படுகிறது. அங்கேயே ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அந்தப் பெண் குழந்தைதான் இந்த பாப்பாத்தி அம்மன் எனவும், பனிக்குடம் உடைந்து சென்ற நீர்தான் இங்குத் தீர்த்தக் குளமாக மாறியது என்றும், தொப்புள் கொடி அறுக்க பனை ஓலை பயன்படுத்தியதாகவும் (இன்றும் அப்பனை மரம் இங்கு உள்ளது), அறுத்தெறிந்த தொப்புள் கொடி பல கிளைகளாக மாறி இந்த அம்மனுக்கு நிழல் தந்ததாகவும் கூறுகின்றனர். அப்பெண் தன் தாய் வீட்டுக்குச் சென்றாரா, கணவன் தேடி வந்தாரா போன்ற கேள்விக்கு ஊர்க்காரர்களிடம் பதில் எதுவும் இல்லை.

அதிசயச் சுனை

அதிசயச் சுனை

இந்தக் கோயிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை ஆடி 18 அன்று மாபெரும் திருவிழா ஒன்றும் இக்கிராம மக்களால் கொண்டாடப்படுகிறது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *